சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சரத்பாபு என்பவரின் கர்ப்பிணி மனைவியான கனிமொழி என்பவர், ஆர்கே சாலையில் உள்ள ருக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். பத்தாவது மாதம் துவங்கியதும் தம்மை சந்தித்த தம்பதியிடம், குழந்தை நன்றாக உள்ளது என்றும் ஸ்கேன் எதுவும் எடுக்க தேவையில்லை என்றும், அந்த மருத்துவர் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த செவ்வாய் கிழமை ஸ்கேன் எடுத்து பார்த்ததில், குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமையே இறந்து விட்டது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள இசபெல்லா என்ற தனியார் மருத்துவமனைக்கு, அவரை மருத்துவர் ருக்மணி பாய் அழைத்து சென்றுள்ளார். அங்கு, இறந்த குழந்தையை வெளியில் எடுக்குமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இசபெல்லா மருத்துவர்கள், குழந்தையை சுகப்பிரசவத்தில் எடுக்க முடியும் என்று கூறி நாட்களை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இறந்த குழந்தை காரணமாக தொற்று ஏற்பட்டு கனிமொழி இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கனிமொழியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிகிச்சை கட்டணமாக 3 லட்சம் ரூபாயை கட்டச் சொல்லி மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மயிலாப்பூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் கனிமொழியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தபடும் என்றும் காவல் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
The tragic death of a teenager due to negligence on the part of private hospital doctors in removing a stillborn baby before delivery has caused a great stir.